ஒற்றை பனைமரம்
மருத்துவமனை போய்விட்டு அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தேன்.
"நாளைக்கு தானேப்பா பாக்க வர சொல்லிருந்தாங்க" என் மகள் கேட்டாள்.
பதில் கூறும் முன் மணி ஒன்பதை அடித்தது
பெண்டுலம் மணி இரவு ஒன்பதை அடித்ததும் என்னை சூழ்ந்து கொண்டான் குமரன்.
"தாத்தா, தாத்தா கதை" என்று
வாஞ்சையோடு கேட்கும் பேரனை எவ்வாறு ஏமாற்றுவது. 22 வயது நிரம்பி கல்லூரி படிப்பை முடித்து வீட்டிற்கு வந்திருக்கும் அவன் நான் இரவு ஆனால் கதை கூறுவதை நினைவில் வைத்து என்னிடம் வந்து இவ்வாறு கேட்டதும் மனம் சற்று ஆடித்தான் போனது. வாழ்க்கையில் எதையோ சாதித்த பெருமை எனக்கு. கண்ணோரம் தோன்றிய கண்ணீரை மறைத்து அந்த முழு பௌர்ணமி நிலவின் ஒளியில் என்னுடைய கயிற்று கட்டிலில் அமர்ந்தேன்.
நிச்சயமாக 10 வயது குழந்தைக்கு கூறும் கதையை இப்பொழுது என்னால் கூற இயலாது அல்லவா. என்ன கதை சொல்வது என்பதை அறியாமல் அமர்ந்திருக்கும் என்னை பார்த்த அவனின் ஆர்வம் கலந்த விழிகள் என் மனதை ஈரமாக்கியது.
அந்த ஈரம் என் மனதுக்கு ஒரு கதையை நினைவுபடுத்தியது. கூற தொடங்கினேன்.
...
அந்த மாலை பொழுதில் செய்வதிற்கேதும் இல்லாமல் தன்
கையில் இருந்த அந்த காகித காத்தாடியியை சுற்றியபடி அந்த பொட்டல் காட்டின் வழியே நடந்து சென்றான் அந்த சிறுவன்.
"என்னடா ராமா
துளி காத்து கூட இல்ல" சலித்துக்கொண்டான் அவன்.
அந்த ராமாவோ எப்பொழுது வீட்டுக்கு போவோம் அன்றிருந்தான். அந்த வானம் பார்த்த பூமியில், அதுவும் அந்த வெயில் காலத்தில் நடந்து போனால் எப்படி இருக்கும் பின்பு.
"நான் 3 நாள்ள
கெளம்பிடுவேன்டா செல்வம் " ராமா சொன்னான்.
"ஊருக்கு வந்துட்டு போடா அப்போ அப்போ" தன் பால்ய ஸ்நேகிதனை பிரியும் வலி செல்வத்தின்
மனதுக்கு அவ்வளவாக புரியவில்லை போலும். அப்போது வீசிய அந்த உஷ்ண காற்றுக்கு அந்த காத்தாடி சுற்றியது.
ராமாவுக்கோ அந்த ஊரை விட்டு போக மனமில்லை. அந்த ஊரில் பிழைக்க முடியாது என்பதை அறிந்து வேறு ஊருக்கு மாற்றம் ஆகி போகும் அவனின் குடும்பத்துக்குதானே தெரியும் அவர்களின் கஷ்டம். அதனை ஏற்றுக்கொள்வதை தவிர அந்த சிறுவனின் மனதுக்கு வேறு வழி இல்லை.
"டேய் டேய் அந்த ஒத்த பனைமரத்துக்கு கூட்டிட்டே போலையேடா நீ இன்னும் " அந்த காத்தாடியை ஆட்டியவாறு கேட்டான் ராமாவிடம்.
அவர்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது ஊரின் தெற்கு எல்லையில் இருக்கும் ஒரு பெரிய ஒற்றை பனைமரத்தை பார்க்கவேண்டும் என்பது. சுடுகாட்டிற்கு அருகில் உள்ளதால் தனியாக யாரும் செல்லாத இடம் அது. அந்த சிறுவன் எவ்வாறு போவான். ராமாவை கூட்டிக்கொண்டு போலாம் என்பது அவன் எண்ணம். ஊரை காலி செய்யும் சோகத்தில் இருந்த ராமாவோ அதை மறந்து விட்டான்.
"ஆமா ல..." குரல் சற்று உள்ளே சென்றது ராமாவுக்கு.
அவ்வாறு பேசிக்கொண்டே ஊர் வந்து சேர்ந்தார்கள் அந்த சிறுவர்கள்.
இரண்டு நாட்கள் வேகமாக ஓடியது. "நாளைக்கு விடிஞ்சதும் கெளம்பறோம்" ராமாவின் அம்மா கூறிய வார்த்தை அவன் செவிகளை எட்டியது. எப்பொழுது திரும்பி வருவோம் என்பதை அறியாமல் கிளம்பும் ராமாவுக்கு செல்வம் தன்னிடம் ஒற்றை பனைமரத்துக்கு கூட்டி போகச்சொல்லியது நினைவுக்கு வந்தது.
வீட்டிற்கு சொல்லாமல் செல்வத்தின் வீட்டுக்கு ஓடினான்.
"டேய் டேய் செல்வம் சீக்கிரம் வாடா ஒத்த பனைமரம் போலாம்" மூச்சு இரைக்க செல்வத்தின் முன் நின்றான் ராமா.
"இப்போவாடா" செல்வம் ஆச்சரியமாக கேட்டான்.
"நாளைக்கு இந்நேரத்துக்கு இங்க இருக்க மாட்டேன்டா,... வா இப்போவே கூட்டிட்டு போறேன்" சற்று சோகம் கலந்த குரலில் கூறினான் ராமா.
சற்றைக்கெல்லாம் அந்த சிறுவர்கள் ஒத்தை பனைமரத்தை அடைந்தார்கள்.
சூரியன் அடங்கும் தருணம். அந்த சிறுவர்கள் அந்த பனைமரத்தடியில் நின்று கொண்டு தூரத்தில் மறையும் சூரியனை பார்த்தார்கள். இல்லை, ரசித்தார்கள்.
...
"தாத்தா !" குமரனின் குரல் என்னை நினைவுக்கு கொண்டுவந்தது.
"வித்யாசமான கதையா இருக்கே தாத்தா" அவன் கேட்டான்.
பதில் கூற முடியாமல் சிரித்தேன். எதையோ மனதில் இருந்து இறக்கிவைத்தாற் போல இருந்தது எனக்கு. என் கண்கள் சொக்கியதை பார்த்த குமரன் என்னை தூங்க சொல்லி சென்றான்.
என் கயிற்று கட்டிலில் படுத்தேன். ஆகாயத்தில் பளிச்சென்று இருந்த அந்த இரண்டு நட்சத்திரங்களை பார்த்தவாறு கண் அசந்தேன்.
நாட்கள் ஓடின. என் தினசரி வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தேன். சரியான நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம், அவ்வப்போது மருத்துவமனை என்று. பேரன் மேற்படிப்புக்காக செல்வதற்கு அவனை வழி அனுப்பி வைக்க சென்றேன்.
"அண்ணா,
அந்த ஓரத்துல கார நிப்பாட்டுங்க" காரின் முன் இருக்கையில் இருந்த குமரன் டிரைவர் இடம் கூறினான்.
"தாத்தா, கொஞ்சம் எறங்குங்க" காரை விட்டு இறங்கியவாறு என்னிடம் சொன்னான். இறங்கினேன்.
வெளியே பார்த்த காட்சி என்னை நிலைகுலைய செய்தது. அருகில் இன்னொரு வண்டியில்...
ஆம் , அவனே தான்.
எச்சில் கூட விழுங்க முடியாத நிலையில் இருந்த என்னை பார்த்து குமரன் கூறினான்.
"நீங்க என்கிட்ட சொன்ன கதை, வெறும் கதை இல்லனு நீங்க சொல்றப்போ உங்க குரலை வச்சே தெரிஞ்சிகிட்டேன் தாத்தா... உங்க குரல்ல இருந்த நடுக்கம் அந்த கதைல இருந்த ராமா
நீங்கதானு தெரிஞ்சது."
நான் சற்றே ஆடிப்போனேன்.
"நீங்க சொன்னது பாதிதான் உண்மைனும் நீங்க அந்த ஒத்த பனைமரத்த பாக்கவே இல்லன்றதும்
தெரிஞ்சது . நீங்க வெளிய சொல்லாம
வச்சிருந்த சோகம் உங்க கண்ல இருந்த தண்ணி காட்டிகொடுத்திருச்சு."
"அப்பறம்,.. உங்களோட ஹாஸ்பிடல் போற பழக்கம். உங்கள கூட்டிட்டு போக வந்தப்போ ஒரு நாள் நீங்க கேன்சர் வார்டுல இருந்து வந்தத பாத்தேன். நான் இன்னொரு நாள் போய் விசாரிச்சப்போ நீங்க அங்க இருக்கிற ஒரு நோயாளிய ரொம்ப நாளா வந்து
பாத்துட்ருக்கிறதா சொன்னாங்க. அவர்தான் செல்வதுரை, உங்களோட செல்வம்.
அங்க நிக்கிறாரு பாருங்க" கை காட்டினான்.
நோயால் அவதிப்பட்டு தன் தோற்றத்தைத் தொலைத்த செல்வம் , என்னை பார்த்து கலங்கி சிரித்தான். ஆம் , செல்வத்தை நான் பல வருடங்கள் கழித்து அந்த மருத்துவமனையில் சந்தித்தேன். நடக்க முடியாத நிலையில் இருந்த செல்வம். என் செல்வம்.
எப்படியோ ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.
குமரனை பாத்தேன். என் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துகொண்ட அவன்
"அந்த ஓரத்துல பாருங்க தாத்தா" என்றான். என் கண்கள் கலங்கின. இம்முறை, நான் அடக்கவில்லை. கதிரவன் மறையும் அந்த நேரத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது அந்த ஒற்றை பனைமரம்.
என் அருகில் வந்து நின்றான் செல்வம். "கூட்டிட்டு போறியா ?" குரல் உடைந்து கேட்டான்.
செல்வத்தை தாங்கியவாறு நடை போட்டேன், எங்கள் பனைமரத்தை நோக்கி.
முற்றும்